உலககோப்பை கிரிக்கெட் பிப்ரவரி 19-ந்தேதி துவங்குகிறது. ஏப்ரல் வரை இது நடைபெறும். ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரலில் துவங்கும். இப்போட்டிகளால் தமிழ் படங்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு காவலன், ஆடுகளம், இளைஞன், சிறுத்தை போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் இன்னும் பல புதுப் படங்கள் ரிலீஸாகாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 30 படங்கள் இப்படி இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் வரவுள்ளதால் திரையுலகினருக்குப் பெரும் சிக்கலாகியுள்ளது. இந்த நேரத்தில் ரஜினி படமாகவே இருந்தாலும் கிரிக்கெட் விசிறிகள், கிரிக்கெட் போட்டியைத்தான் விரும்பிப் பார்ப்பார்களே தவிர தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள் என்பதால் இந்த பீதி.
இது போக, கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தியேட்டர்களில் ஒளிபரப்ப முயற்சிள் நடந்து வருகிறதாம். அதேபோல அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் முயற்சிகள் நடந்து வருகிறதாம். இது நடந்தால் திரையுலகுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 140 படங்கள் வரை வந்தாலும் கூட 10 படங்கள்தான் கையைக் கடிக்காமல் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இப்படி கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பினால் நிலைமை மோசமாகி விடும் என திரையுலகினர் கவலைப்படுகின்றனர்.
இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரன் கூறுகையில், கடந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்பு முயற்சி நடந்தபோது கடுமையாக எதிர்த்தோம். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இவ்வருடமும் உலக கோப்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப சில தியேட்டர்கள் முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அப்படி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பினால் வன்மையாக எதிர்ப்போம்.
அந்த தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். கிரிக்கெட்டுக்கு மைதானம் இருக்கிறது. டி.வி. இருக்கிறது. தியேட்டர்கள் நாங்கள் தொழில் செய்யும் இடம் அங்கு கிரிக்கெட்டை ஒளிபரப்புவது கண்டனத்துக்குரியது என்றார்.
ஆனால் தியேட்டர்களில் ஒரு தரப்பினர் படங்களைத் திரையிட்டு காற்று வாங்குவதற்குப் பதில் இப்படி கிரிக்கெட் போட்டிகளைக் காட்டி காசு பார்க்கலாம் என்று மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரையுலகினரிடையே மோதல் மூளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாம்.
English summary
There is an attempt to telecast World Cup and IPL cricket matches in Theatres. Distributors are against this move. WC cricket begins in february. IPL4 tournament starts after WC. Theatre operators are keen to live telecast these matches. Bue distributors say, this will kill the Cinema industry. We will oppose this move, said distributor Kalaipuli Sekaran.
No comments:
Post a Comment